Annamalai's BJP Posting: அண்ணாமலைக்கு அம்சமான பதவி.. பாஜகவின் சூப்பர் ஆஃபர்.. இனி கலக்கல் தான்...
பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு தேசிய பதவி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது என்ன பதவி என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தமிழ்நாட்டின் தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து, அடுத்த தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பதவி என்ன என்பது குறித்து வெளியான தகவலைத்தான் தேற்போது பார்க்கப் போகிறோம்.
தமிழ்நாட்டு மக்களிடம் பாஜகவை கொண்டு சேர்த்த அண்ணாமலை
பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை ஐபிஎஸ், 2019-ல் பெங்களூரு தெற்கு காவல்துறை இணை ஆணையராக பணியாற்றியபோது, அந்த பணியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்தார். விவசாயத்தில் ஆர்வம் காட்டிய அண்ணாமலை, ஐஏஎஸ் பயிற்சி மையத்தையும் தொடங்கினார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது, போதைப் பொருளுக்கு எதிராகவும், சட்டவிரோத மதுபானக் கடைகளை மூடியும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
Just In



பின்னர் பாஜகவில் இணைந்து முழுநேர அரசியல்வாதியாக செயல்படத் தொடங்கிய அண்ணாமலை, 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், பாஜக தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார்.
மேடைப் பேச்சுகளில் அதிரடி காட்டும் அண்ணாமலை, சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. புள்ளி விவரங்களுடன் கூடிய அவரது பேச்சுக்கள் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை மக்கள் திரும்பிப் பார்க்கச் செய்தார். அதோடு, என் மண் என் மக்கள் என் பாதயாத்திரை மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவை கொண்டு சேர்த்து, மேலும் பிரபலமடைந்தார். அதோடு, அவரது நிர்வாகத் திறமையும் பாராட்டு பெற்றது.
பாராட்டிய அமித் ஷா.. தேசிய பதவி வழங்கப்படும் என பதிவு
பாஜக தமிழ்நாடு தலைவராக இருந்த அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரே தலைவராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி உடனான மோதல் போக்கு காரணமாக, கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அதிமுக உடன் நெருக்கமாக இருந்த நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டு, கூட்டணியும் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்துவந்தது. தலைவர் தேர்வுக்கு முன்னதாக, அண்ணாமலை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்ட அமித் ஷா, பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை புரிந்துள்ளதாக தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் அரசியல் மற்றும் திட்டங்களை கிராமம் கிராமமாக மக்களிடம் எடுத்துச் சென்றதில், அவரது பணிக்கு ஈடு இணை இல்லை என பாராட்டியிருந்தார். அண்ணாமலையின் நிர்வாகத் திறனை தேசிய அளவில் பாஜக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அமித் ஷா பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலையின் புதிய பதவி குறித்து வெளியான தகவல்
இந்நிலையில், பாஜகவில் அண்ணாமலையின் தேசிய பதவி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவின் இளைஞர் பிரிவான யுவமோர்ச்சாவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக, பாஜக தேசிய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில், இளைஞர்கள் மத்தியில் பாஜக பிரபலமடைந்ததற்கு அண்ணாமலை முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதனால், அவரது அந்த திறமையை, தேசிய அளவில் பயன்படுத்த, பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு இது அம்சமான பதவியாகத்தான் இருக்கும். தற்போது, பாஜக யுவமோர்ச்சா தலைவராக இருப்பவர், கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா. அவருக்கு பதிலாக, அண்ணாமலை அந்த பதவியில் விரைவில் அமர வைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.