பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழகத்தில் பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக NCRB அறிக்கை தெரிவித்துள்ளதாகக் கூறி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 5 ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டதாக அவர் விமர்சித்துள்ளார். அவரது பதிவின் முழு விவரங்களை காண்போம்.

Continues below advertisement

“5 ஆண்டுகளில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது“

இது குறித்த அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன. பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது.

Continues below advertisement

மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்“ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள் போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.

ஐந்து ஆண்டுக் கால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்.“ என்று கூறியுள்ளார்.