திமுக கோப்புகள் 2 தொடர்பாக அனைத்து ஆதாரத்தையும் வீடியோ மூலம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என முழு நம்பிக்கை இருப்பதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”2024 ஆம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க ஆட்சியில் அமர வேண்டும். மோடி தலைமையில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க இந்த நடைப்பயணம் பயனுள்ளதாக இருக்கும். நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறுகிறது. 168 நாட்களில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார்கள். 29 ஆம் தேதி ராமநாதபுரத்தில் இருந்து இந்த நடைப்பயணம் தொடங்கும். 1700 கிமீ தொலைவு 234 தொகுதிகளையும் கால்நடையாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பாக கட்சி பிரமுகர்கள் பங்கேற்பார்கள். எடப்பாடி பழனிச்சாமி கலந்துக் கொள்வது தொடர்பாக இதுவரை உறுதி செய்யவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக பேசுகையில், “என்.எல்.சி.க்கு மாநில அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த கூடாது. நிலத்தை கையப்படுத்த ஒரு முறை இருக்கிறது. இது தொடர்பாக பா.ஜ.க தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சியில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அது தான் நிதர்சனம். ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு ஒரு முறை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுக கோப்புகள் 2 தொடர்பாக, ஆளுநரிடம் வீடியோ ஆதாரமாக கொடுக்கப்பட்டுள்ளது. 6 அமைச்சர்கள் மற்றும் பினாமிகள் தொடர்பான அனைத்து ஆதாரத்தை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக ஆட்சியில் ஊழல் இருக்கிறது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதற்கு இனி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அமைச்சர்கள் மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் பொய் என அவர்கள் நிரூபிக்கட்டும். ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் இருந்து ஒரு நாளும் பின் வாங்க மாட்டோம்” என பேசியுள்ளார். மேலும் மணிப்பூர் அமைதி நிலையை நோக்கி திரும்புவதாகவும் கூறியுள்ளார்.