சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் குறித்து, அவரது குடும்பத்தினரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

Continues below advertisement

“நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது மூன்றாந்தர அரசியல் அல்ல“

நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர்  நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.“ என தெரிவித்துள்ளார்.

மேலும், “அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை  இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.“ என கூறியுள்ளார்.

Continues below advertisement

அதோடு, “இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.“ என தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் பேசியது என்ன.?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஒரே நாடு இதழின் இரண்டாம் பதிப்பு அறிமுக நிகழ்ச்சி, சென்னை கமலாலயத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இறந்த மாட்டு தோலினால் செருப்பு செய்யலாம், இறந்த ஆட்டுத் தோலினால் ஆடை செய்யலாம், இறந்த மனிதன் தோலினால் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார். மேலும், இன்றைக்கு அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்யக்கூடிய சூழல் அமைந்துள்ளது என்று கூறிய அவர், சட்டமன்றத்தில் சென்று அப்பா எங்கே என கேட்கிறார்கள். வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று சொல்வார்கள். சட்டசபையில் சென்று அப்பாவை கேட்டால் யாருக்கு தெரியும். இப்படிப்பட்ட ஆட்சி தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இப்படி, முதலமைச்சர் விஜய் குடும்பத்தைப் பற்றி நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசியதற்கு, கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே நடிகை த்ரிஷா பெயரை பயன்படுத்தி விஜயை அவர் விமர்சித்த, பின்னர் வருத்தம் தெரிவித்த நிலையில், தற்போது முதலமைச்சரின் குடும்பத்தைப் பற்றி பேசியுள்ளதால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.