அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றுகூறி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார். நெற்றியில் திருநீறு பூசி சட்டை அணியாமல், பச்சை வேட்டி கட்டி கோவையில் அவர் இவ்வாறு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி சம்பவம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், திமுக அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன், சில மணி நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். எனினும் அவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த குற்றத்தை தடுத்திருக்கலாம் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
மாணவி விவரங்களுடன் வெளியான முதல் தகவல் அறிக்கை
இதில் அடுத்த திருப்பமாக, சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியானது. இதற்கு அனைவருமே கடும் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து அரசு தன் கட்சிக்காரர் என்பதால் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானதைக் கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன், 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார்.
சாட்டையில் விளாசல்
தொடர்ந்து கோவையில் இன்று தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் இறங்கினார். 6 முறை என்றுகூறி, 8 முறை தன்னைத்தானே சாட்டையில் விளாசிக் கொண்டார். 9ஆம் முறையாக அடிக்கப்போனவரை அங்கிருந்த நிர்வாகிகள் தடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’’பா.ஜ.கவின் போராட்டம் வருகின்ற காலத்தில் இன்னும் தீவிரமாகும். தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது. தமிழ் மண்ணின் மரபுப்படி பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
பா.ஜ.க நிர்வாகிகள் யாரும் இது மாதிரி செய்ய மாட்டார்கள். பா.ஜ.க தொண்டர்கள் அறவழியில் போராட வேண்டும். வெற்றி தோல்வியை தாண்டி தமிழ் சமுதாயத்தை சீர்திருத்தவே பாஜக போராடுகிறது’’ என்று தெரிவித்தார்.
என்ன மாதிரியான செயல்?
எனினும் இந்த செயல் குறித்து நெட்டிசன்கள், ’’எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவது இயல்புதான். அதற்கு அமைதியான வழியில் போராட்டம் சரி, ஆனால் தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு மக்கள் கவனமீர்ப்பது என்ன மாதிரியான செயல்?’’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.