2001 - 2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதியப்பட்டு சுமார் 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து தூத்துக்குடி மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கின் பின்னணி:
2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராகப் பதவி வகித்த நிலையில், 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்க்கப்பட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தினர் விடுவிப்பு
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேரை விடுவிப்பதாக நீதிபதி சுபா தேவி தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பு வெளியானதையொட்டி அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
