தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாம் நாளாக மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களை விரட்டும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 



இருப்பினும் காத்திருப்பு போராட்டமானது நீடித்தது. இரவு நேரம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து தங்களது கோரிக்கையினை முன் வைத்தனர். காலை வெயில் தொடங்கிய நிலையில் அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு சாமியான பந்தல் அமைக்கும் பணியினை மேற்கொண்டனர். ஆனால் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பின்னர் குடிநீர், உணவு போன்றவற்றிற்கு காவல் துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மாநகரத்தின் மையப் பகுதி என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை போன்றவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் காவல் துறையினர் வேண்டுகோளை ஏற்று அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 



அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ஊழியர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும். முறையான பென்ஷன் வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும் ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு அல்லது மூன்று மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அதனை சரி செய்திட வேண்டும். உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு ஜிபிஎப் பணம் வழங்க வேண்டும். பணியில் இருக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஜிபிஎப் லோன் வழங்க வேண்டும்.


மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இதனை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 மணி நேரம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தினால் இன்று அங்கன்வாடி மையங்கள் செயல்படவில்லை. பின்னர் மாநில உறுப்பினர்கள் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டமானது கைவிடப்பட்டது.