ரூ.1.62 லட்சம் கோடி திரண்ட இழப்புடன் இந்தியாவில் முதலிடம் உள்ளதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க ஊழல்கள், முறைகேடுகளை களைய வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

 

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2022-23ஆம் ஆண்டு வரை ரூ.1.62 லட்சம் திரண்ட இழப்புடன்,  இந்தியாவிலேயே அதிக இழப்பை சந்தித்த மின்வாரியங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்புக்கு மத்திய அரசால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் நிலவும் ஊழல்களும், முறைகேடுகளும் தான் இத்தகைய இழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும்.

 

இந்தியாவில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் சேர்ந்து 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம்  ரூ. 6.47 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருக்கின்றன. அதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு மட்டும் 25% ஆகும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை இந்தியாவின் முதன்மை மின்வாரியமாக மாற்றப் போவதாகக் கூறியவர்கள், இழப்பை சந்திப்பதில் முதல் நிறுவனமாக தமிழ்நாடு மின்சார வாரியத்தை உயர்த்திருப்பது அவமானகரமான சாதனையாகும்.

 

2015-16ஆம் ஆண்டில் ரூ.63,162 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் திரண்ட இழப்பு  2022-23ஆம் ஆண்டில் ரூ. 1.62 லட்சம் கோடியாக  அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியத்தின் இழப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் எந்த மின்சார வாரியமும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக இழப்பை சந்திக்கவில்லை.

 

திமுக ஆட்சிக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு சுமார் ரூ.9000 கோடி இழப்பில் இயங்கி வந்தது. மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு 2022&23 ஆம் ஆண்டில் மின்வாரியத்திற்கு குறைந்தது 14,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்வாரியத்தின் இழப்பு அந்த ஆண்டில் 10,000 கோடியாக அதிகரித்தது. 2023 ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், அந்த ஆண்டில் ரூ.35,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்திருக்கக் கூடும். அதன்படி பார்த்தால் 2023&24 ஆம் ஆண்டில்  மின்வாரியம் குறைந்தது ரூ.26,000 கோடி லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், மின்சார வாரியம் இன்னும் இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

மின்சார வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து தனியாரிடமிருந்து  மின்சாரம் வாங்கப்படுவது தான் இழப்புக்கு காரணம் ஆகும். தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தினால் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து  மின்சாரம் வாங்க வேண்டியிருக்காது. ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால் தான் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதற்காகவே, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தாமலேயே ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர். தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்தும் வரை மின்வாரியம்  நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க முடியாது.

 

2022-23ஆம் ஆண்டில் மின்சார வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.82,400 கோடி மட்டும் தான்.  ஆனால், அதில்  ரூ.51,000 கோடி, அதாவது கிட்டத்தட்ட 62%  வெளியிலிருந்து மின்சாரம் வாங்கியதற்காக மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இது தவிர மின்சார வாரியம் வாங்கிக் குவித்த  கடனுக்கான வட்டியாக மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ.10,000 கோடி செலுத்தப்படுகிறது. இத்தகைய சூழலில்  மின்சார வாரியத்தை எப்படி லாபத்தில் இயக்க முடியும்?  என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

 

எனவே, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்; தனியாரிடமிருந்து  அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும். மின் வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகளைக் களைய வேண்டும். அதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.