நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன்  ஸ்டாலின்’  முகாமில்  குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம்  நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் கையூட்டு கேட்டு தொல்லை கொடுத்த நிலையில்,  குடிநீர் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம்: அரசு நடத்துவது உங்களுடன் ஸ்டாலின் முகாம்களா? அல்லது ஊழலுடன் ஸ்டாலின் முகாம்களா? என  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன்  ஸ்டாலின்’  முகாமில்  குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த வழக்கறிஞர் ஒருவரிடம்  நகராட்சி ஊழியர் ரகுபதி என்பவர் கையூட்டு கேட்டு தொல்லை கொடுத்திருக்கிறார். திமுக ஆட்சியில்  எங்கும் கையூட்டு, எதிலும் கையூட்டு  என்ற சூழல் நிலவும் நிலையில் அரசின் சேவைக்காக அரசு ஊழியர் கையூட்டு கேட்டிருப்பது எந்த வகையிலும் அதிர்ச்சி அளிக்கவில்லை;  மாறாக, தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுக ஆட்சி என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கிறது.

Continues below advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதுமையும் இல்லை; அரசு அலுவலகங்களில் இயல்பாக வழங்கப்பட வேண்டிய சேவைகளை, முகாம்களை நடத்தி  காலதாமதமாக வழங்குவது தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்று தொடக்கத்திலிருந்தே குற்றஞ்சாட்டி வருகிறேன். குறைந்தபட்சம்  இந்த முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது கையூட்டு வாங்காமலாவது நடவடிக்கை எடுத்திருந்திருக்கலாம்.

ஆனால், அதைக் கூட செய்யாமல்,  குடிநீர் இணைப்புக்கு பெயர் மாற்றக் கோரி விண்ணப்பித்த ஒருவரின் மனுவில் இருந்த அவரது  செல்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து தொடர்பு கொண்டு  கையூட்டு வழங்கும்படி அரசு ஊழியர் கட்டாயப்படுத்துகிறார் என்றால் தமிழக அரசால் நடத்தப்படுவது  ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற வினா தான் எழுகிறது.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்...  பல கோடி  ரூபாய் மக்கள் வரிப்பணத்தை செலவிட்டு விளம்பரப்படுத்தி  நடத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களால் தங்களுக்கு விளம்பரம் கிடைத்ததாக ஆளும் திமுக வேண்டுமானால் திருப்தி அடையலாமே தவிர, மக்களுக்கு எந்தப் பயனும்  இல்லை. மாறாக, இத்தகைய விளம்பரத் திட்டங்களுக்கு மாற்றாக சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அரசின் அனைத்து சேவைகளும் கையூட்டு  இல்லாமல் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கும். எனவே, அதை உடனடியாகச் செய்து திமுக அரசு பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.