புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற 'பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா' மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாமக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், "நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என மிகக் காரசாரமாக வலியுறுத்தினார்.

Continues below advertisement

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற பொதுத்தேர்வுகள்முறைகேடு தடுப்பு சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆற்றிய உரை., 

இந்தியாவில் நீட் தேர்வு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது நீட் தேர்வு கொண்டு வரப்படுவதற்காக இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பது. இரண்டாவது தரமான மருத்துவர்களை இந்திய மருத்துவ முறைக்கு கொண்டு வருவது ஆகும். ஆனால்,பத்தாண்டுகள் ஆன பிறகு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதற்கான இரு காரணங்களும் தோற்கடிக்கப்பட்டு விட்டன. இந்தியாவிலேயே இன்று மிகவும் வணிகமயமாக்கப்பட்ட தேர்வு என்றால் அது நீட் தேர்வு தான். அதை மையமாக வைத்து ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் கோடிக்கு வணிகம் நடைபெறுகிறது. பெரு நகரங்களில் மட்டுமின்றி, சிறிய நகரங்களிலும் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Continues below advertisement

இரண்டாவதாக ஒன்றைக் கூறுகிறேன், எனக்குத் தெரிந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வில் 720-க்கும் 590 மதிப்பெண் எடுத்தார். ஆனால் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. காரணம் அவரது தந்தை விவசாயி. அவரால் 5 லட்சம் கட்டணம் செலுத்த முடியவில்லை. அவருக்கு தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடம் தான் கிடைத்தது. எனக்கு இன்னொரு மாணவனையும் தெரியும், அவர் 110 மதிப்பெண் மட்டுமே எடுத்தார். அது 15% மட்டும் தான். ஆனாலும் அவரது தந்தையால் ஆண்டுக்கு ரூ.27 லட்சம் கட்டணம் செலுத்த முடியும் என்பதால் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டார். இப்படி இருக்கும் போது நீட் தேர்வில் தரம் என்பது எங்கே இருக்கிறது?

கடந்த ஆண்டு முதுநிலை நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் ஆகும். இவர்கள் தான் குழந்தை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்களாக வருவார்கள். நம்மிடம் வலிமையான சிஸ்டம் இல்லாத சூழலில் அதற்கு புத்துயிரூட்டப்பட வேண்டும். நமது நாட்டில் பழங்காலத்தில் இருந்த நளந்தா பல்கலைக்கழகம் உலகம் முழுமைக்கும் அறிவைப் பரப்பியது. ஆனால், இப்போது நமது கல்வி முறை அறிவு சார்ந்த நிலையிலிருந்து நீட் சார்ந்த, தேர்வு சார்ந்த ஒன்றாக மாறி விட்டது. ஜே.இ.இ. தேர்வு சார்ந்ததாக மாறி விட்டது. எனக்கு தெரிந்த ஒருவர் அவரது ஆறாம் வகுப்பு மாணவர் ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சிக்கு செல்வதை பெருமையாக கூறுகிறார்.

இவர்கள் விளையாடுவதில்லை. வேறு எந்த செயலிலும் ஈடுபடுவதில்லை. எப்போதும் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகிறார்கள். மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக இயற்பியல், வேதியியல், உயிரியல் மட்டும் படிக்கிறார்கள். இவர்களுக்கு வரலாறு, புவியியல், மொழிகள் தெரிவதில்லை.நெருக்கடி காலத்தில் பல தவறுகள் செய்யப்பட்டன. கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அந்த தவறுகளை இப்போது சரி செய்ய வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

நீட் தேர்வு காரணமாக கடந்த பத்தாண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 15, 16, 17 வயதில் உள்ள குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியா எங்கே செல்கிறது? குழந்தைகளால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்காவது நீட் தேவை ரத்து செய்ய வேண்டும். அதன் பின் மாணவர்கள் நன்றாக படிக்கும் வகையிலான தேர்வு முறையை உருவாக்க வேண்டும். இதற்கான சீர்திருத்தங்களை அரசு செய்ய வேண்டும், நீட் தேர்வு முறையில் மட்டுமில்லாமல் கல்வி முறையிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதன் மூலம் நமது குழந்தைகள் அவர்கள் விரும்பும் படிப்பை படிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இந்த மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.