விழுப்புரம் : பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, தனது தந்தை மருத்துவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Continues below advertisement

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, தனது தந்தை மருத்துவர் ராமதாஸைச் சந்தித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக, சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள கொம்புதூக்கி பகுதியில் அமைந்துள்ள மான்போர்ட் மலைவாழ் மக்கள் சமுதாய நல மேல்நிலைப் பள்ளியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது. இந்த இலாபநோக்கற்ற கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், அங்கு பயிலும் மலைவாழ் மாணவ-மாணவிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

ஏற்காட்டில் நடைபெற்ற இந்த பள்ளிப் பொதுநிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர் சாலை மார்க்கமாக சென்னைக்கு புறப்பட்டார். சென்னை செல்லும் வழியில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்திற்கு அவர் வந்து சேர்ந்தார். சமீபத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பியிருந்தார். இந்த நிலையில், அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் தற்போது வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இரண்டாவது முறையாக தனது தந்தை மருத்துவர் ராமதாஸ் அவர்களை அன்புமணி ராமதாஸ் அவர்கள் சந்திக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

மேலோட்டமாக இது தந்தை-மகன் சந்திப்பாகப் பார்க்கப்பட்டாலும், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் நகர்வுகள் பாமகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் மற்றும் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடந்த மோதலுக்கு பின்னர் நடந்த முதல் சந்திப்பு, பாமக மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 மருத்துவர் ராமதாஸ் தரப்பில் உள்ள ஆதரவாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் ஜி.கே. மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர், தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ரகசியக் கூட்டங்களை நடத்தி வருவதாகத் தெரிகிறது. கட்சியின் தற்போதைய நிலவரம் குறித்து அவர்கள் தங்களுக்குள் தீவிரமாக ஆலோசனை கேட்டு வரும் வேளையில், இரண்டாவது முறையாக தந்தையை மகன் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ள இந்த நிகழ்வு, தைலாபுரம் தோட்டத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த பாமக தொண்டர்களிடையேயும் பெரும் பரபரப்பையும், அரசியல் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.