மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

திருவள்ளூரில் 4வது புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஆவடி சா.நாசர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் “நமக்கான இருமொழி கொள்கையே போதும். அப்படி இருக்கையில் அரசு பள்ளிகளின் வாசலில் நின்றுகொண்டு, ஒரு போர்டினை வைத்துக்கொண்டு, பள்ளி மாணவர்களின் கையை பிடித்து இழுத்து கையெழுத்து போட வற்புறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். மாணவர்கள் அவர்களாக வந்து கையெழுத்து போட்டால் சரி. ஆனால், கையெழுத்து கேட்டு மாணவர்களை வற்புறுத்துவது, மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

Continues below advertisement

இதுபற்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் வந்தால் அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக பாஜகவினர் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தினை தொடங்கியுள்ளனர். ஆனால் பாஜகவின் மும்மொழிக்கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதற்கு மத்தியில் பாஜகவின் மூத்த தலைவர்கள் தலைமையில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் தமிழிசை தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதி வாங்காமல் இவ்வாறு நடந்து கொள்வது சட்டவிரோதமானது என போலீசார் எடுத்துரைத்தனர்.

ஆனால் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபடவே போலீசார் தமிழிசையை கைது செய்து சில மணி நேரங்களுக்கு பின்னர் விடுவித்தனர். இதனிடையே பாஜகவினர் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்களிடம் பாஜகவினர் பிஸ்கட் வழங்கி கையெழுத்து போட்டுவிட்டு செல்லுமாறு வற்புறுத்தும் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.