காணாமல் போன ஒன்றரை சவரன்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ராமச்சந்திரன் என்பவரின் குடும்ப வளைகாப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சாத்தான்குளம் வணிக வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் வீட்டிற்கு சென்றதும் பேராசிரியர் ராமச்சந்திரனின் குடும்ப உறவினர் பெண் ஒருவரின் 1 1/2 பவுன் செயின் நிகழ்ச்சி நடந்த அன்று காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராசிரியர் ராமச்சந்திரன் திருமண மண்டப நிர்வாகியான அந்தோணி ராஜ் என்பவரிடம் கூறியுள்ளார். அதன் பேரில் மண்டபத்தில் பணியாளராக வேலை செய்யும் மூதாட்டி பாலசுந்தர் என்பவரின் மனைவி அந்தோணியம்மாள் என்பவரிடம் செயின் தவறவிட்டது தொடர்பாக மண்டப நிர்வாகி அந்தோணிராஜ் கூறியதன் பேரில் மண்டபம் முழுவதும் தேடிய அந்தோணியம்மாள் மண்டபத்தில் நாற்காலிகள் அடுக்கி வைத்திருக்கும் இடத்தின் அருகே செயின் இருந்ததை கண்டுபிடித்து அதனை மண்டப நிர்வாகி அந்தோணி ராஜ் மூலம் சாத்தான்குளம் டிஎஸ்பி அருளிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.
கண்டுபிடித்து கொடுத்த மூதாட்டி:
அதன் பேரில் தவறவிட்ட 1 1/2 பவுன் செயினை சாத்தான்குளம் டிஎஸ்பி அருள், மூதாட்டி அந்தோணியம்மாள் மூலமாக செயினை தவறவிட்ட பேராசிரியர் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தார். அப்போது செயினை வாங்கிக் கொண்ட பேராசிரியர் ராமச்சந்திரன் தனது செயினை பத்திரமாக தேடி கண்டுபிடித்து நேர்மையுடன் ஒப்படைத்ததை பாராட்டும் விதமாக 10,000 ரூபாய் பணத்தை மூதாட்டி அந்தோணியம்மாளுக்கு டிஎஸ்பி அருள் மூலமாக பரிசாக கொடுத்தார்.
மேலும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் மூதாட்டி அந்தோணியம்மாளின் நேர்மையை பாராட்டும் விதமாக சால்வை அணிவித்து கௌரவித்தார். இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மூதாட்டி அந்தோணியம்மாள் என்பவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது மூக்குத்தியை அருகே உள்ள ஒரு கடையில் அடகு வைத்து 2000 ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படும் அந்த ஏழ்மை நிலையிலும் நேர்மையுடன் 1 1/2 பவுன் செயினை கண்டுபிடித்து ஒப்படைத்தது அனைவரையும் நெகிழ வைத்தது.
மேலும் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த அந்த மூதாட்டி "ஐயா நான் இதுவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் பக்கமே வந்ததில்லை..." "வருவதற்கே பயமா இருந்துச்சு" என வெகுலியாக டிஎஸ்பியிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.