கரூர் அருகே தென்னந்தோப்பில் முதியவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


எரிந்த நிலையில் சடலம்:


கரூர் மாவட்டம், மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பண்ணன் (72) மற்றும் காத்தவராயன் (68). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில் கருப்பண்ணனை தேடி உறவினர்கள் சென்று பார்த்த போது முதியவர் கருப்பண்ணன் எரிந்து கரிக்கட்டையான நிலையில் சடலமாக கிடந்துள்ளார். 


 


 




இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடப்பிரச்சனை சம்பந்தமாக கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் தான் எரித்து கொலை செய்திருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், அவரை கைது செய்யும் வரை பிரேதத்தை எடுக்கக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 


 





உறவினர்கள் சாலை மறியல்.


ராசா கவுண்டனூர் பகுதியில் கருப்பண்ணன் என்ற 72 வயது முதியவர் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். நிலம் சம்பந்தமாக அண்ணன் கருப்பண்ணன், தம்பி காத்தவராயன் ஆகிய இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தென்னந்தோப்பில் எரித்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரம் ஆகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை என காவல்துறையை கண்டித்து காந்திகிராமம் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 



சுமார் 1 மணி நேரம் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடலை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக வழக்கு பதிவு செய்து, குற்றவாளி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.  கரூர் அருகே சொத்து பிரச்சனையில் 72 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரை தென்னந்தோப்பில் எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.