புதுச்சேரி :அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி உள்ளதால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காந்திவீதியில் உள்ளது. வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இந்த மளிகை கடை தொடங்கப்பட்டது. இதேபோல் அரசு சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பலருக்கு வழங்கப்படும் கூப்பன்களுக்கு இங்கு தான் மளிகை பொருட்கள் வாங்க அனுமதி வழங்கப்படும்.




நகரின் மையப்பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளதால் பலர் மாதந்தோறும் இங்கு வந்து தான் மளிகை பொருட்கள் வாங்குவர். இதன் அடித்தளத்தில் அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், முதல் தளத்தில் மளிகை பொருட்களும், 2-வது தளத்தில் துணிக்கடையும், வாட்ச் கடையும் செயல்பட்டு வருகிறது.


நிதி நெருக்கடி ஆனால் சமீப காலமாக அமுதசுரபி நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு முறையாக மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமுதசுரபி நிறுவனம் மூலம் 2015-16-ம் நிதியாண்டில் அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் விநியோகம் செய்யப்பட்டன.


இதற்காக ரூ.48 கோடி செலவானது. இதற்கு அப்போதைய அரசு நிதி ஒதுக்கவில்லை. அமுதசுரபி நிறுவனத்திடம் நிதி இல்லாததால் வங்கியில் கடன் வாங்கப்பட்டது. அதன்பின் 2016-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அந்த நிதி அமுதசுரபிக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்காக இன்னும் அந்த நிறுவனம் வட்டி கட்டி வருகிறது. இங்கிருந்து முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு எழுதுபொருட்கள், தூய்மை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.




இதற்கான தொகையை அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு மாதமும் அமுதசுரபிக்கு செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அரசு துறைகள், அமுதசுரபிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய பணமும் செலுத்தப்படவில்லை. அந்த வகையில் மொத்தம் ரூ.58 கோடி பாக்கி உள்ளது. இதனால் கொள்முதல் செய்வது குறைந்து நிதி நெருக்கடியால் அமுதசுரபி சிக்கித் தவிக்கிறது. அங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்குவது தடைபட்டுள்ளது.




பரந்து விரிந்து காணப்படும் மளிகை கடையில் உள்ள ரேக்குகள் அனைத்தும் காலியாக உள்ளன. ஆங்காங்கே ஒரு சில பொருட்கள் மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. துணிக்கடையிலும் இதே நிலை இருந்து வருவதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து வாராக்கடன்களை முழுமையாக வசூலித்து அமுதசுரபியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். முன்பு இயங்கியது போல மளிகை பொருட்களை முழுமையாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.