பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்து இணையும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இபிஎஸ்-க்கு சிக்னல் கொடுக்கும் டிடிவி:


தேசிய அளவில் பாஜக வலுவான கட்சியாக இருக்கும் போதிலும் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம்தான் நிறைந்திருக்கிறது. எப்போதும், திமுக, அதிமுகவுக்கிடையேதான் போட்டி இருந்து வந்துள்ளது. எவ்வளவு கட்சிகள் இருந்தாலும் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது வழக்கம்.


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. பலமான கூட்டணி, திமுகவுக்கு பெரும் பிளஸ்ஸாக இருந்து வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கடந்தாண்டு மக்களவை தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெற்றது.


ஆனால், எதிரணி பிளவுப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக, மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது.


கடந்தாண்டு மக்களவை தேர்தலில் பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றது.


மாறுமா கூட்டணி கணக்கு?


அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்து இணையும்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


"பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் தான் தன் மீதான பழியை எடப்பாடி பழனிச்சாமி துடைக்க முடியும். அதிமுக மட்டும் அல்ல, எந்த கட்சி வேண்டுமானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் வந்து இணையலாம்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இதையும் படிக்க: Chi Chi Chi Song: இந்தியாவே VIBE செய்யும் சீ சீ சீ பாடல்! எத்தனை வருஷத்துக்கு முன்னாடி வந்தது தெரியுமா?