அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். 


கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்ட நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியால் அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த சூழலில் பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்தார்.


இதில் முதலில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷி கேஷ்ராய் அமர்வு  முன்னதாக அளிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான  சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதியாகியிருக்கிறது.


இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி  தரப்பிடம் இரட்டை இலையை கொடுத்தாலும் அது சோபிக்காது. அது இன்னும் பலவீனம் அடையும். வருங்காலத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் தான் திமுக என்னும் தீயசக்தியை வீழ்த்த முடியும்” என தெரிவித்துள்ளார்.


மேலும், “இரட்டை இலை கிடைச்சிடுச்சின்னு ஈரோடு கிழக்குல எடப்பாடி பழனிசாமி தரப்பு வெற்றி பெற முடியுமா? . ஏற்கனவே இரட்டை இலையோட சட்டமன்ற தேர்தல்ல ஆட்சி அதிகாரம், பண பலத்தோட போட்டியிட்டப்போது கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.இது எடப்பாடி பழனிசாமி தரப்பு தற்காலிகமான வெற்றி தான்” எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.