வருத்தப்பட்ட டிஆர்பி ராஜா.. போனை போட்ட அமமுக MLA காமராஜ்.. என்ன சொன்னார் தெரியுமா?
அமமுக சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் தேர்தலில் வெற்றி பெற்றார். அங்கு திமுக அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா தோல்வியடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

டி.ஆர்.பி. ராஜா வருத்தப்படுவதை கண்டிருந்தால் மன்னார்குடியில் நான் போட்டியிட சீட் கேட்டிருக்கவே மாட்டேன் என அமமுக எம்.எல்.ஏ., காமராஜ் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் வென்ற அமமுக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இடம்பெற்றது. அக்கட்சி சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றார். அங்கு திமுக அமைச்சராக இருந்த டி.ஆர்.பி.ராஜா தோல்வியடைந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எஸ்.காமராஜ் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததாக கூறப்பட்டது.
தன் கட்சி எம்.எல்.ஏ., கடத்தப்பட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநர் மாளிகையில் சென்று ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து முறையிட்டார். அடுத்த சில மணி நேரத்தில் எஸ்.காமராஜ் டிடிவி தினகரனை சந்தித்தார். இதன்பின் இருவரும் ஆளுநரை சந்தித்த நிலையில் டிடிவி தினகரன் கிண்டி காவல் நிலையத்தில் தவெக மீது புகாரளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவு கொடுத்த காமராஜ்
இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் பங்கெடுத்த காமராஜ், தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜயை புகழ்ந்து தள்ளினார். அவருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார். இதனால் டென்ஷனான டிடிவி தினகரன் காமராஜை கட்சியை விட்டு நீக்கியுள்ளார்.
டிஆர்பி ராஜாவுக்கு ஆறுதல்
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமராஜ் எம்.எல்.ஏ., “திமுகவில் இருந்த எல்லா அமைச்சர்களுடனும் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை அங்கு எம்.எல்.ஏ.,வாக இருந்த டி.ஆர்.பி. ராஜா சில இடங்களில் பேசும்போது வருத்தப்பட்டு பேசினார். எனக்கே அதைக் கேட்டு சங்கடமாக இருந்தது. உடனே நான் அவருக்கு போன் போட்டு பேசினேன். அப்போது நீங்கள் வருத்தப்பட்டு பேசியதைப் பார்த்தேன். இப்படி பேசுவதை கண்டிருந்தால் கண்டிப்பாக மன்னார்குடி தொகுதியில் சீட் வேண்டாம் என சொல்லியிருப்பேன். தயவுசெய்து வருத்தப்படாதீர்கள் என கூறினேன். மேலும் மன்னார்குடியில் உங்களுக்கும் எங்களுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு அப்படியே நீடிக்கட்டும். இன்னும் 100 ஆண்டுகாலம் ஆனாலும் நீங்கள் செய்த பணிகள் மாதிரி வராது.
நான் 5 ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இங்கு செய்யப்பட்ட பணிகள் டிஆர்பி ராஜா கொண்டு வந்த பணிகள் என்று தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் நீங்கள் இனிமேல் சங்கடப்பட வேண்டாம் என கூறினேன். அதுமட்டுமல்லாமல் எனக்கு வாழ்த்து தெரிவித்த அவருக்கு நன்றி தெரிவித்தேன். டிஆர்பி ராஜா நிறைய திட்டங்களை கொண்டு வந்தார். வைகாசி மாதத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்படும். அங்கு ஒரு ஊழியர் பணியமர்த்தப்பட்டார். நான் ஊரில் இருக்கும்போது தினமும் காலையில் 1 மணி நேரம் அலுவலகத்தில் இருப்பேன்” என கூறியுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















