ஜல்லிக்கட்டில் அனைத்து விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக இத்தகவலை தெரிவித்தது.


ஜல்லிக்கட்டு அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில் தமிழக அரசு இதனை தெரிவித்துள்ளது. 


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, காளைகள் ஒன்றரை வயது முதல் 6 வயது வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும். 6 வயதுக்கு பிறகு காளைகளை வீடுகளில் வளர்ப்பவர்  உடற் தகுதி, தோற்றத்தை வைத்தே லட்சத்துக்கு மேலான பணம் கொடுத்து காளை வாங்கப்படுகிறது. ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருப்பது போன்று காளைகளை கொல்லும் வழக்கம் கிடையாது என ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.  


ஜல்லிக்கட்டை தொடர்ந்து அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. 


இந்த வழக்கி தொடர்பாக, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எடுத்துக் கூறி வாதாடினார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட அரசியல் சாசன அமர்வு எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.


அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி, (23.11.2022) அன்று தாக்கல் செய்தது. அந்த எழுத்துப்பூரவமான வாதத்தில், ''பாரம்பரிய விளையாட்டுக்குத் தடை விதித்தால் தமிழ் கலாசாரம் அழியும் நிலைக்குத் தள்ளப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் போற்றும் வகையில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. விலங்குகள் வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படவில்லை. மிகவும் பாதுகாப்பான முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. எனவே போட்டிகளை தொடர்ந்து நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.


இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஜல்லிக்கட்டுக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்ற வாதத்தை வைத்த தமிழ்நாடு  அரசு, ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பொழுதுபோக்கு போட்டி இல்லை.


காலம் காலமாக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பின்னால் நாட்டு மாடுகளின் இனவிருத்தி, கலாசாரம், பாரம்பரியம் உள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வேண்டும்.


18 மாதம் முதல் ஆறு வயதுக்குள் இருக்கும் நாட்டுமாட்டு காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறக்கப்படும். அதன் பின்னர் வயது முதிர்ந்த காளை மாடுகளை வீட்டில் தங்கள் குடும்ப உறுப்பினராக  வளர்ப்பார்கள். வெளிநாட்டில் இருப்பது போன்று காளை மாடுகளைக் கொல்லும் வழக்கம் தமிழ்நாட்டில்  கிடையாது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, போட்டியில் பங்கு பெற சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. அதனை துன்புறுத்தல் என்று கூற முடியாது.' என வாதத்தையும் எடுத்து வைத்தது.