கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவில் கடந்த 17 ஆம் தேதி கலந்து கொண்ட அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் அங்குள்ள உள்ளரங்கத்தில் உரையாற்றியுள்ளார். அப்போது கேரளா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை சம்பவத்தை மேற்கோள் காட்டி இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை என்றும் கேரளாவில் ஒருவரை வெட்டினால் இன்னொருத்தரை வெட்டுவார்கள், தமிழகத்தில் ஒருத்தருக்கு பத்து பேர் என்றும் அடியாத மாடு பணியாது என்று வன்மமாக பேசிய நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. 

 



 

இதனை அடுத்து நாட்டில் அமைதியை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டிய விதத்தில் பேசிய அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க புதுக்கடை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரத்தினதாஸ் புகாரளித்த நிலையில் பாலசுப்பிரமணியம் மீது கு.எண்.126/22 u/s 153(A),505(1)(c) IPC உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கடை போலீசார் அவரை இன்று அதிகாலை ஈத்தாமொழி யில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.

 



 

கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியத்திற்கு குழித்துறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில் தகவலறிந்து அங்கு வந்த தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் அவரை குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு உடல் நலம் குறைவாக உள்ளதால் சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.