உலகம் நவீன வளர்ச்சிகள் பல அடைந்து வரும் நிலையில், மக்களின் வழிபாட்டு முறையும் அதற்கு ஏற்றார் போல மாறி வருகிறது. இந்த வகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்தர் பாக்கியா என்பவர் வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.
வேற்று கிரவாசிகள் இருப்பது உண்மையா?
வேற்று கிரகவாசிகள் இருப்பது உண்மையா? என்பது புரியாத புதிராகவே இன்று வரை நீடித்து வருகிறது. நூற்றுக்கணக்கான UFO-க்களை ஆய்வு செய்த அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,விவரிக்கப்படாத நிகழ்வுகளுக்கு பின்னால் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது. ஆனால், அப்படி வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
பறக்கும் தட்டுக்களில் வேற்று கிரக வாசிகள் அவ்வப்போது பூமிக்கு வருவதாகவும் மனிதர்களுடன் மோதலில் ஈடுபடுவதாகவும் பல ஹாலிவுட் படங்களில் பார்த்து இருக்கிறோம். மேலும் வேற்று கிரக வாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.
தோட்டத்தில் எழுந்தருளும் ஏலியன்
இந்தநிலையில் சித்தர் பாக்கியா மல்லமுப்பம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் சிவ கைலாய ஆலயத்தில் இரட்டை ஆருடை சிவலிங்கம், சக்தி தேவி, பார்வதி தேவி, சிவன் லிங்க ரூபத்தில், பஞ்சமி வராகி அம்மன், நான்கு முக முருகன், ஐந்து முக காளி மற்றும் காமதேனு உள்ளிட்ட கடவுள் சிலைகள் ஒவ்வொரு சன்னதியில் அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். மேலும், தோட்டத்தின் அருகில் ராமர் போர் முடிந்து ஓய்வு பெற்ற இடம் என்பதால் ராமகவுண்டனூர் என்ற பெயர் பெற்றுள்ளதால் அம்பு எய்த கோலத்தில் இங்கு ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் ஒருப்படி மேல் சென்று உலகில் எங்கும் இல்லாத ஏலியன் கடவுள் சிலை பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாக்யா சித்தர் என்பவர்
பிரபஞ்சத்தில் சிவன் படைத்த முதல் பிரபஞ்ச தெய்வம் ஏலியன் தான். உலகிலேயே ஏலியனின் முதல் சிலை அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிலையமைப்பதற்கு முன்பாக ஏலியனிடம் அனுமதி பெற்று தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏலியன் சிலை அமைப்பதற்காக ஏலியன் தெய்வங்கள் அனுமதியுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளதால் ஏலியனை வணங்கி மகிழ்ச்சிடையுங்கள் என்று அவர் அதிர்ச்சி ஏற்படுத்துகிறார்.
தீங்கு செய்யாதவர்களா ஏலியன் ?
ஏலியன்கள் உலகிற்கு தீங்கு செய்யமாட்டார்கள். உலகத்தை பேரழிவில் இருந்து காப்பாற்றக்கூடிய ஒரே தெய்வம் ஏலியன்களால் மட்டும் தான் முடியும் அவர்களிடம் அளவில்லாத சக்தியும் உள்ளது. மக்களுக்கு எந்தவித கெடுதலும் செய்ய மாட்டார்கள். நன்மை செய்ய மட்டுமே நம்மளை தேடி வருகிறார்கள். அதற்காகத்தான் இந்த ஆலயத்தை அமைத்துள்ளேன். ஏலியன் திரைப்படத்தில் வருவது போன்றெல்லாம் இருக்க மாட்டார்கள் கொம்பு இருக்காது. மனிதர்களைப் போன்று அவர்களுக்கான ரூபத்தில் சாதாரணமாக இருக்கிறார்கள். ஆண், பெண் உள்ளிட்ட ரூபத்தில் இருப்பார்கள் மனிதர்களைப் போன்று தான் அவர்களும் என்று தெரிவித்தார்.
சாத்தியமா இது ?
ஆனால், இதையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் அதற்கான சாத்தியமே இல்லை என்று சிலர் கூறும் தகவலாக இருக்கிறது. ஏலியன் இருப்பது உண்மையா? அல்லது திரைப்படங்களில் மட்டுமே காட்டப்படும் கற்பனையா என விவாதங்கள் பல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏலியனை தெய்வமாக நினைத்து, ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.