2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இனிதே தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் அலங்காநல்லூர் பக்கம் அனைவரது பார்வையும் திரும்பியது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தொடங்கி வெளிநாட்டினர் வரை அனைவரும் வருகை தந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தருகிறார். இதனை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1100 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அலங்காநல்லூர் வருகை தர உள்ள நிலையில் அவர்கள் காண பிரத்யேக கேலரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு காரும், காளைக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 2ம் பரிசாக பைக் வழங்கப்படவிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சைக்கில், கட்டில், மெத்தை, அண்டா, பிளாஸ்டிக் சேர், தங்க நாணயம் போன்றவையும் பரிசாக வழங்கப்படுகிறது.
