பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் அடையாளமாக திகழும் பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது ஜல்லிக்கட்டு ஆகும். பொங்கல் பண்டிகயை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளையும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களையும் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் அலங்காநல்லூரில் குவிந்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி:
வழக்கமாக, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்ப்பதற்கு தமிழ்நாட்டினர் மட்டுமின்றி வெளிநாட்டினரும் குவிவது வழக்கம். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காகவே மலேசியாவில் இருந்து மாற்றுத்திறனாளி ஒருவர் வந்துள்ளார்.
மலேசியாவில் வசிப்பவர் சுப்ரமணியம். தமிழரான இவர் மலேசியாவிலே தனது குடும்பத்துடன் நிரந்தரமாக குடியேறியுள்ளார். மாற்றுத்திறனாளியான இவர் இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்த்து வந்துள்ளார். அவருக்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆர்வத்துடன் வருகை:
இதையடுத்து, நடப்பாண்டு நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தனது மனைவியுடன் நேரில் வந்து பார்த்து ரசித்தார். இதுதொடர்பாக, சுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இதுவரை தொலைக்காட்சியில் தான் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துள்ளேன். இன்று நேரில் பார்க்க வந்ததால் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இவர் மட்டுமின்றி ஆஸ்திரேலியா நாட்டு அமைச்சர், இஸ்ரேல் உள்ளிட்ட பிற வெளிநாட்டினரும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். காணும் பொங்கல் தினத்தில் நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி மிக மிக புகழ்பெற்றது. போட்டியைத் தொடங்கிய உதயநிதி:
இன்று நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1000 காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளதால் போலீசார் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி. தங்கத்தமிழ்ச்செல்வன், பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மகன் இன்பநிதியும் இந்த போட்டியை நேரில் கண்டுகளித்தார். நேற்று முன்தினம் தைத்திருநாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.