சட்டப்பேரவை இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்பட இருக்க்கிறது.


ஓபிஎஸ் இருக்கையை உதயகுமாருக்கு வழங்க வலியுறுத்தல்


இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை மாற்றப்படாததால், ஓ.பன்னீர்செல்வம் அருகிலேயே இந்த கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாம் அமரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசம் வந்துவிட்ட நிலையில், சில நாட்களுக்கு முன் அதிமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் அப்பாவு-வை சந்தித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி. உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இருக்கை மாற்றமில்லை - சபாநாயகர்


ஆனால், இருக்கை மீது ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்பது சட்டப்பேரவை மரபில் இல்லாத நிலையிலும் இருக்கையை மாற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில், இன்று கூடவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஓ.பன்னீர்செல்வம் அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


எதிரும் புதிருமான இருவர்


ஒரே கட்சியில் ஒன்றாக பயணித்து, இன்று எதிரும் புதிருமாக ஆகிவிட்ட இருவரும் மீண்டும் அருகருகே அமரக்கூடிய காட்சியை மக்கள் மன்றம் இன்றும் பார்க்கவிருக்கிறது. கடந்த கால சட்டமன்ற கூட்டத் தொடர்களில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாமலும் பேசிக்கொள்ளாமலுமே இருந்தனர். அதோடு, அதிமுக சார்பில் ஓபிஎஸ் பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், இருக்கை மாற்றப்படாத சூழலில் இதனை பிரச்னையாக கிளப்பியும் சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு மாநில பிரச்னைகளை எழுப்பியும் அவையை புறக்கணிக்க அதிமுக முடிவெடுத்துள்ளாதாக கூறப்பட்டுள்ளது.  ஏற்கனவே, இருக்கையை மாற்றச் சொல்லி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் முழக்கங்கள் எழுப்பி, அவையை புறக்கணித்தனர். ஆனால், அப்போதும் சபாநாயகர் அப்பாவு இருக்கை விவகாரம் என்பது தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என்றும் இந்த விஷயத்தில் தன்னை யாரும் நிர்பந்திக்க முடியாது எனவும் அறிவித்தார். 


அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்


இந்நிலையில், பேரவை நடவடிக்கைகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்திலேயே எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இருக்கை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தனித் தீர்மானம கொண்டுவரும்போது பங்கேற்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


ஓபிஎஸ் தகுதி நீக்கம் ?


அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்று இப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்த அதிமுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொண்டதால் அவரை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேரவை தலைவர் அப்பாவுவிடம் புதிய மனு ஒன்றை அளிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தன்னை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிவரும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவே கிடையாது என்று பேரவையிலேயே அறிவிக்க சொல்லியும் சபாநாயகரிடம் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது