முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டத்தை எதிர்த்து, அவர் அழைத்துச் செல்லப்பட்ட நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், சில வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடும் சம்பவங்கள் நடைபெற்றதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்ததாக திமுக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்திய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 47(கலகத்தில் ஈடுபடுதல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலகத்தில் ஈடுபடுதல்), 294(பி) (ஆபாசமாக திட்டுதல்), 153 (கலகம் செய்ய தூண்டி விடுதல்), 355 (தாக்குதலில் ஈடுபடுதல்), 323 (காயம் ஏற்படுத்துதல்), 324 (ஆயுதம் அல்லது வேறு வழிகளில் காயம் ஏற்டுத்துதல்), 506(2) கொலை மிரட்டல் மற்றும் பொதுசொத்தை சேதப்படுத்தல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதகால திமுக ஆட்சியில், அதன் சர்வாதிகார போக்கு வெளிப்பட்டு விட்டதாக அதிமுக சாடி வருகிறது. இந்த கைது நடவடிக்கைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குட்பட்ட 49-வது வார்டில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்வதாக தகவல் பரவியது.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த வார்டு பகுதிக்கு விரைந்தார். அப்போது, சிலர் அந்த வாக்குச்சாவடியில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, அவர்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அவரது தலைமையில் சென்ற வழக்கறிஞர் அணியினரும் துரத்திச் சென்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒரு நபரை மட்டும் அ.தி.மு.க.வினர் பிடித்தனர்.
அந்த நபரை சூழ்ந்த அ.தி.மு.க.வினரில் சிலர் அவரை தாக்கினர். அப்போது, அங்கே இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரை “சட்டையை கழட்டுடா” என்று ஆவேசமாக திட்டினார். சட்டையை கழற்றவைத்து அந்த நபரை ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் இழுத்துச்சென்றனர். பின்னர், அந்த நபரிடம் ஜெயக்குமார் உனக்கு இந்த வார்டில் என்ன சம்பந்தம்? என்று கேட்டார். நரசிங்கன் தெரு 51வது வார்டில் வரும். நீ எதற்கு இங்கே வந்தாய்? என்று கேள்வி எழுப்பினர்.