கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளதாக திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 63 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
CBCID விசாரணை
இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த வழக்கு CBCID வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒரு நபர் ஆணையம் அமைப்பு:
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
அதிமுக கோரிக்கை : சிபிஐ விசாரணை:
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆளுநரைச் சந்தித்தார். அவருடன் 60-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களும் உடன் சென்றனர். கருப்புச் சட்டை அணிந்துசென்ற அவர்கள், நியாயமான விசாரணை நடைபெறுவதை அரசு உறுதிசெய்ய, ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். ஒரு நபர் ஆணையத்தால் நியாயம் கிடைக்காது. மெத்தனால் குடித்தால் சரி செய்யும் மருந்து மருத்துவமனையில் இல்லை. ஆனால் இதை பற்றி நான் பேசிய பிறகுதான் மருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய மரணம் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றால் சிபிஐதான் விசாரிக்க வேண்டும். மாநில அரசு காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என இபிஎஸ் தெரிவித்தார்.
உண்ணாவிரத போராட்டம்:
இந்நிலையில், கள்ளச்சாராய மரணத்தை, திமுக அரசு தடுக்க தவறியதாக, திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாளை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிமுக திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.