எம்.பி ரவீந்தரநாத் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் இபிஎஸ்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி. கே. பழனிச்சாமி, பொறுப்பேற்றவுடனேயே ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கினார். தற்போது அவரது மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவிந்திரநாத் உள்ளிட்ட 18 பேர் கட்சியியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த வந்த நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதி ரத்து செய்யப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார். பொதுக்குழு நடந்த போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர் செல்வம், செய்தியாளர்களிடம், ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைபாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி. முனுசாமியை நான் அதிமுகவிலிருந்து நீக்குகிறேன் என கூறினார்.
இந்நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான ஓபிஎஸ் மகன்களான தேனி பாராளுமன்ற எம்.பி ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், கோபாலக்கிருஷ்ணன், எஸ். எ. அசோகன், ஓம்சக்தி சேகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை கலையும் வகையில் செயல்பட்டதால் இந்த 18 பேரும் அவர்கள் வகிக்கும் பொறுப்பு மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்