AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
அதிமுகவில் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்து வெளிச்சத்திற்கு நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நிர்வாகிகள் குவிந்து அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில், சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மூலம் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில், அதனை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவந்தார். ஆனால், அந்த மோதல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்று காலை எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக செயல்படுவார் என 17 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் வழங்கப்பட்ட நிலையில், மாலையில், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டதால், அதிமுகவின் உட்கட்சி மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர். இதனால், அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு அணிகளாக செயல்பட்டு, அதிரடிகள் அரங்கேறியுள்ள நிலையில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் குவிந்து வருகின்றனர்.
கே.பி. முனுசாமி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் நிர்வாகிகள், கவுன்சிலர்கள் என பலரும் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு வருகை தந்து, ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
2 மணி நேரத்தில் தெரியும் என கூறிய சி.வி சண்முகம்
முன்னதாக, இன்று மாலை 6.30 மணியளவில், 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களுடன் தலைமைச் செயலகம் வந்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியும், கொறடாவாக சி. விஜயபாஸ்கர் செயல்படுவார்கள் எனக் கூறி, தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
இந்த பரபரப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்எல்ஏ-வுமான சி.வி சண்முகத்திடம், அதிமுக உடைந்துவிட்டதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கொஞ்சம் பொறுமையாக இருங்கள், இன்னும் 2 மணி நேரத்தில் எல்லாம் தெரிந்துவிடும் என்று கூறினார் சி.வி. சண்முகம். இதையடுத்து, அந்த சம்பவம் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக உடைந்தது உறுதியானது
இந்த சம்பவத்தின் மூலம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலும் அதிமுக இரண்டாக உடைந்துள்ளது உறுதியாகியுள்ளது. காலையில் இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், மாலையிலேயே அவர் கூறியது பொய் என்பது தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து உடைந்த அணி தவெக-விற்கு ஆதரவு.?
இப்படிப்பட்ட சூழலில், அதிகவிலிருந்து உடைந்து வெளியேறும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, விஜய்யின் தவெகவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, இது குறித்துதான் எடப்பாடி பழனிசாமிக்கும், இந்த அணிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் தலைமையில், சுமார் 30 எம்எல்ஏ-க்கள், விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, ஆட்சியில் பங்குபெறலாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளனர்.
ஆனால், அவர் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார். இதனால் தான், தற்போது அதிமுக இரண்டாக உடைந்துள்ளது. இதனிடையே, இரு அணிகள் இருவருக்கு ஆதரவாக கடிதம் வழங்கியுள்ள நிலையில், சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், தற்போது உருவாகியுள்ள புதிய அணி, தவெகவிற்கு ஆதரவளிக்கும் என தெரிகிறது.
இதனிடையே, பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் புதிய அணியில் இருப்பதார், அதிமுக அவர்களது கைக்கு செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் தான், இபிஎஸ் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















