பொங்கல் பரிசை திமுக அரசு முறைகேடு இல்லாமல் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், , ‘ அமைச்சர் சிவசங்கர் பேருந்தில் பயணிக்கும் பெண்களிடம் விளக்கம் கேட்கின்றார், அதிலும் ஜாதி குறிப்பிட்டு கேட்கின்றார். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என வாக்குறுதி தரப்பட்டது ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை. பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும் மற்ற பேருந்துகளில் ஏரினால் கட்டணம் செலுத்த வேண்டும். இது திராவிட மாடல் ஆட்சி இல்லை தந்திர மாடல் ஆட்சி. மக்களை ஏமாற்றும் ஆட்சி இது. இனியாவது எதிர்க்கட்சிகள் சொல்கின்ற குறைகளை ஆராய்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பொங்கல் பரிசில் தரக்குறைவான பொருட்கள் வழங்கி பெரிய அளவில் முறைகேடு நடந்தது. திமுக கொடுத்த பொங்கல் பரிசு மக்கள் மறக்க முடியாத பரிசாக அமைந்தது. இனியாவது முறைகேடு இல்லாமல் பொங்கல் பரிசை அரசு வழங்க வேண்டும். அனைவரின் விருப்பம் அதுதான்.


டெல்டாகாரன் என்று வீர வசனம் பேசினால் மட்டும் போதாது, டெல்டா விவசாயிகளுக்கு உரிய முறையில் தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். தண்ணீர் தேவை பற்றி தெரியாமல் பேசிவிட்டு போனார்கள். இதனை நம்பி விவசாயிகள் 5 லட்சம் ஏக்கரில் பயிரிட்டனர். ஆனால் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே முழுமையாக பயன் கிடைத்தது.


வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.