அம்மா உணவகம் போல, ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரவேற்பும், கண்டனமும் எழ ஆரம்பித்திருக்கின்றன.


திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் அம்மா உணவகம் போர்டை திமுகவை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியபோது அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. அதுமட்டுமின்றி அம்மா உணவகம் என்ற பெயரிலேயே உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆரோக்கிய அரசியலுக்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.


இந்த சூழலில் திமுக தற்போது கலைஞர் உணவகம் என அறிவித்திருப்பதன் மூலம் படிப்படியாக அம்மா உணவகத்தை மக்களிடையே மறக்க வைப்பதற்காகத்தான் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். 




அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், கலைஞர் உணவகம் கொண்டு வருவது அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்யத்தான் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.


ஆனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலைஞர் உணவகத்தை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களின் பேராதரவோடு அதிமுகதான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் இரண்டாவதுபட்சம் மக்கள் பலம்தான் முக்கியம்.


ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடைப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும்.  எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தலை முதலமைச்சர் நடத்துவார் என நினைக்கிறோம்.  கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்.




2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழகத்தில்  பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி இருப்பது அவரது ஆசை, விருப்பம். ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா ..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது. பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, பாஜகவினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள்” என்றார்.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் கலைஞர் உணவகத்தை எதிர்க்கும் சூழலில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கலைஞர் உணவகத்தை வரவேற்றிருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண