மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியவை இதோ...
சசிகலா விவகாரத்தில் அதிமுக கட்சிக்குள் சர்ச்சையே கிடையாது. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். சசிகலா குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கருத்து சொன்ன பிறகு, இணை ஒருங்கிணைப்பாளர் கருத்து சொல்லவில்லை. அனைவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தை தான் ஒருங்கிணைப்பாளர் சொன்னார். அதில் என்ன தவறு இருக்கிறது.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தான் ஓ.பி.எஸ். சொன்னார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்ட காரணத்தால், பிற நிர்வாகிகளும் அதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த கருத்துக்களை இப்போது சர்ச்சையாக மாற்ற விரும்பவில்லை. அதிமுகவில் எந்த பிளவும் இல்லை ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் இணைந்து தேவர் பூஜையில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.
சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படும் ஓபிஎஸ் அளித்த பேட்டியின் விபரம் இதோ:
மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற்று, தேவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்விற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். நிகழ்வுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தற்போது பரபரப்பான பேசும் பொருளாக மாறியுள்ளது. இதோ அவர் அளித்த முழு பேட்டி...
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு.
அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.
அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக் போன்ற அனைத்து மக்கள் நல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்த கூடாது, தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி நாங்கள் போராடுவோம்.
திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள். காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது.அரசியல் இயக்கங்களை நடத்துகிறவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அத்துமீறிய செயல்களால் எங்களுடைய வெற்றி மறைக்கப்பட்டு, அது அவர்களின் வெற்றியாக அறிவிக்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்றிருந்தது. கொரோனா காலத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் அது பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வை பொறுத்தவரை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. டீசல் விலை உயர்வு மக்களின் அன்றாட பொருட்களின் விலை உயரும் அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது.