நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன்  பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சித் தாவல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் திடீரென பாஜகவில் இணைந்தார். இது அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.  அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கட்சி தாவல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜகவில் இணைந்த விஜயதரணி நேற்று அவரது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.


இப்படி பரபரப்பான அரசியல் சூழலில் நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. நாளை பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கா. பாண்டியராஜன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்து வருகிறது.






இப்படியான சூழலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கா. பாண்டியராஜன் தனது எக்ஸ் வலைத்தளப்பகுதியில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் !” என பதிவிட்டுள்ளார்.  இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதில்லை என்றும், அதிமுகவில் தான் தனது பணியை தொடர்வார் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.