முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை திமுகவில் சேர சொல்லி அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Continues below advertisement

மாற்றம் காணும் தமிழ்நாட்டு அரசியல்

2026 சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்தது. அவ்வளவு தான். ஆளும் கட்சியாக மாறிய தவெகவுக்கு அதிமுகவில் ஒரு பெரும்படையே சென்று சேர்ந்து வருகிறது. அதேசமயம் ஒரு சிலர் திமுக பக்கம் தாவியுள்ளனர். தேர்தலுக்கு முன் தவெகவுக்கு அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் சென்று இன்று அமைச்சராக உள்ளார். 

அதேசமயம் திமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்ற நிலையில் அவர்கள் இன்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தேர்தலுக்குப் பின் 6 சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெக பக்கம் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றனர். மேலும் முன்னாள் எம்பி, எம்.எல்.ஏ.,க்கள், மேயர், சிட்டிங் கவுன்சிலர்கள் என பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டனர். 

Continues below advertisement

திமுகவில் ஐக்கியமாகிறாரா ராஜேந்திர பாலாஜி?

இப்படியான நிலையில் அதிமுகவில் தென்மாவட்டத்தின் மிக முக்கிய முகமாக வலம் வரும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திமுகவில் சேர உள்ளதாக சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் ஆதரவாளர்கள் இனி அரசியல் களம் தவெக - திமுக இடையே இருக்கும் என நினைப்பதால் கட்சி மாறும் முடிவை எடுக்க வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அதிரடியான பேச்சுக்கு பெயர் போன இவர் மீது ஊழல் வழக்குகளும் உள்ளது. ஆவின் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் அவர் ஒருமுறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவையெல்லாம் நடந்தது திமுக ஆட்சியில் தான். இதற்கிடையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போதைய அமைச்சர் கீர்த்தனாவிடம் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். 

இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். சமீபகாலமாக கட்சி நிகழ்வுகளில் இருந்து பெரும்பாலும் ராஜேந்திர பாலாஜி ஒதுங்கியே இருப்பதாக அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். உட்கட்சி பூசல் தான் அவரின் தேர்தல் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. 

ராஜேந்திர பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு அதிமுக தலைமை மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அவரின் ஆதரவாளர்களிடையே இருப்பதாக சொல்லப்படுகிறது. தென்மண்டல முக்கிய முகமாக இருந்தாலும் கட்சியின் முடிவெடுக்கும் அதிகார வரம்புக்குள் அவர் இல்லை என்பதால் கட்சி மாறலாம் என ஐடியா கொடுத்துள்ளார்கள். 

உயிர்மூச்சு உள்ளவரை அதிமுக தான்

ஆனால் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் உயிர் மூச்சு உள்ளவரை தனக்கு அரசியல் அடையாளம் கொடுத்த அதிமுகவில் தான் இருப்பேன் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார். அப்படியான அவரை ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. விருதுநகரில் ஒரு காலத்தில் 7 தொகுதிகளையும் அதிமுகவுக்காக வென்று கொடுத்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆனால் 2026 தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 

மேலும் அந்த மாவட்ட திமுக முகமாக அறியப்படும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தற்போது 76 வயதாகிறது. அடுத்த தேர்தல் வருவதற்குள் 80ஐ தொட்டு விடுவார். 2031 தேர்தலில் பெரும்பாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க திமுக முடிவு செய்துள்ளது. அப்படியான நபர்களை வழிநடத்தும் பொறுப்பு நீங்கள் திமுகவில் இணைந்தால் கிடைக்கும் என ஆதரவாளர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நிகழ்காலம் அடையாளம் கொடுத்த அதிமுகவா.. எதிர்கால அடையாளமாக அமையும் திமுகவா.. ராஜேந்திர பாலாஜி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.