திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சமூக விரோதிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்கிறார்களா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதிலும் சுதந்திரமாக செயல்பட்டு வந்த காவல் துறை, திமுக ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுதெல்லாம் தனது சுய முகவரியை இழந்து, ஆளும் கட்சியின் கைப்பாவையாக மாறி, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து வரும் நிலை மிகவும் வெட்கக்கேடானது.


சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா?


விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் மாட்சிமை பொருந்திய ஆட்சியா? சட்டவிரோத ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறனர். கடந்த 36 மாத விடியா திமுக ஆட்சியில் சட்டத்தைக் காக்கக்கூடிய காவலர்களின் கையைவிட, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரின் கைகளே ஒங்கி இருக்கின்றன என்பது பல்வேறு கொடும் சம்பவங்கள் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கள்ளச் சாராய சாவுகள்; கோவையில் கார் குண்டு வெடிப்பு, அன்றாடம் நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகியவற்றுடன் தலைவிரித்தாடும் போதைக் கலாச்சாரம் என்று நாள்தோறும் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சம்பந்தமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.


காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும். தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்ற இருமாப்போடும், துணிச்சலோடும் சமூக விரோத சக்திகள் ஆட்டம் போடுகின்றன. மக்களுக்கும் பாதுகாப்பில்லை. காவல் துறைக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் தமிழக ஆட்சி சக்கரம் நிலைகுலைந்து போயுள்ளது.


உதாரணமாக, 29.5.2024 மற்றும் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகளில் ஒருசிலவற்றை குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.


பல்வேறு குற்ற நிகழ்வுகள்:


சென்னையை சுற்றி தொடரும் ரத்தக் களரி ஒரே இரவில் 6 பேர் வெட்டிக்கொலை, அரசு நிலத்தை ஆக்கிரமித்து அடாவடி, மும்பையிலிருந்து சென்னைக்கு போதை மாத்திரை கடத்தல், சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை, மது போதையில் மோதல், மண்டை உடைப்பு, வண்ணாரப்பேட்டையில் துணிக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு, ரூட் தல பிரச்சனையில் மாணவனுக்கு வெட்டு, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் கைது, மது வாங்க வீடு புகுந்து பணம் பறித்த நிகழ்வு, கொடுங்கையூர், வியாசர்பாடி பகுதியில் ஒரே இரவில் 5 இடங்களில் வழிப்பறி, பிறந்தநாள் விழாவில் பட்டாக் கத்தியுடன் வாலிபர் நடனம் என்று பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகச் செய்திகள் வந்துள்ளன. இவை, சென்னை நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள் மட்டுமே. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலையும், இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளமுடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலையும் தான் நிலவுகிறது. தமிழகம் முழுவதும் இதுபோன்று பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.


விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு காவல் துறைக்கு இனியாவது முழு சுதந்திரம் வழங்கி இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.