அதிமுகவினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. இ. மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள், சேடப்பட்டி ஒன்றியத்தில் கழக செயல் வீரர்கள் கூட்டத்தை முடித்துக் கொண்டு பேரையூர் செல்லும் போது, மங்கல்ரேவு அத்திப்பட்டு விலக்கு அருகே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், திமுக-வினரின் தூண்டுதலின் பேரில் சில சமூக விரோதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.






இந்த வன்முறை நிகழ்வில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக உசிலம்பட்டி அருகே ஆர்.பி. உதயகுமாருடன் சென்ற வாகனங்கள் மீது சிலர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கிருந்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் அதிமுக நிர்வாகிகள் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்நிலையில் இன்று ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மதுரையில் புகார் மனு அளித்தனர். அதில் அமமுக நிர்வாகிகள் சிலர் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். 


தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயகுமார், “உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அந்த அளவுக்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமியின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 


இந்நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 


இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.