அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து அதிமுக கழக அமைப்புச் செயலாளர் தனபால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் குற்றம்' என்ற நிலையில் இருந்த தமிழ்நாட்டில், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தி மக்களிடையே சமநிலையை ஏற்படுத்தியது அஇஅதிமுக ஆட்சியில தான்.
இந்தியாவில் முதல் முறையாக கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி இரட்டைக் குவளை முறையை ஒழித்து பட்டியலின மக்களை தலைநிமிரச் செய்ததும் அதிமுக ஆட்சி தான்.
குறிப்பாக ஆண்டான் அடிமை முறையை ஒழித்து, மக்களிடையே சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காக மணியக்காரர் முறையை ஒழித்து, கிராம நிர்வாக அதிகாரிகள் நியமனம் என்ற முறையை கொண்டுவந்து கிராம நிர்வாக அலுவலர்களாக அருந்ததியர் சமுதாய மக்களை அமர வைத்ததும் அதிமுக ஆட்சியில் தான்.
குறிப்பாக எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அருந்ததியர் சமுதாய மக்கள் மனதில் 1 சதவீத இடத்தைக் கூடப் பெறமுடியாமல் திமுக திணறியது. ஆனால் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் சமூக மறுமலர்ச்சி திட்டங்களைத் தொடர்ந்து நடத்தி, தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தி ஏழை, எளிய மாணவர்களிடையே கல்வி கற்கும் திறனை மேம்படுத்தினார்.
அருந்ததியர் சமுதாய மக்களுக்கு தீராத அவலத்தை ஏற்படுத்தியது திமுக
அருந்ததியர் சமுதாய மக்களின் ஆதரவைப் பெற முடியாத தி.மு.க. "அருந்ததியர் சமுதாய மக்களை” இழிவுபடுத்தும் வகையில் பல்வேறு வகையிலும் தொடர்ந்து செயலாற்றியது. அருந்ததியர் சமுதாய மக்களின் உள் இடஒதுக்கீடு கோரிக்கை பலமாக எழுந்தது.
அப்போது கண்துடைப்பு ஆணையத்தை ஏற்படுத்தி தமிழ் நாட்டில் வசிக்கின்ற அருந்ததியர் சமுதாய குழுக்கள் பலவற்றை கணக்கெடுப்பு செய்யாமல், ஒருதலைப்பட்சமாக அருந்ததியர் சமுதாய மக்கள் தொகையை குறைந்தபட்ச அளவில் கணக்குகாட்டி 6 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பதிலாக வெறும் 3 சதவீத அளவில் உள் இடஒதுக்கீடு என்று கூறி நாடகம் நடத்தப்பட்டது.
அருந்ததியர் சமுதாய மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிகின்றனர். மீதம் இருக்கின்ற 90 சதவீதம் பேர் விவசாயக் கூலிகளாகவும், தோல் தொழிலாளர்களாகவும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாடு மாகாணத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதி அருந்ததியர் சமுதாய மக்களின் மீது இருந்த வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாக “கையாளும், தலையாளும் மலம் அள்ளும் சமுதாயம்" என்று பேசியது, அரசு பதிவேடுகளிலும் பதிவாகி இன்று வரை தீராத ஒரு அவலத்தை அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
18 சதவீதத்தில் நியாயமாக 6 சதவீத இட ஒதுக்கீடு வரவேண்டிய நிலையில், பெயரளவிற்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை செய்துவிட்டு, துதிபாடு செய்தது தான் தி.மு.க-வின் பணியாகும்.
போலி சமூக நீதியை பேசி திமுக ஆட்சி அமைத்துள்ளது.
கடந்த 10 ஆண்டு காலம் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு ஆதரவாக அருந்ததியர் இட உள் ஒதுக்கீட்டின் வழக்கை திறம்பட நடத்தி, தற்போது கிடைத்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தது அஇஅதிமுக அரசு தான்.
அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த என்னை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் அமர வைத்து அழகு பார்த்தவர் அதிமுக மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஆவார்.
அனைத்துக் கட்சிகளிலும் SC அணி தனித் தனியாக இருக்கிறது. திமுக, காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் SC அணிகளை வைத்திருக்கின்றது. ஆனால், அஇஅதிமுகவில் SC அணி என்று தனி அணி இல்லை. பட்டியலின மக்களை உயர்ந்த பொறுப்புகளில் நியமித்து கௌரவிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டின் பலனாக நூற்றுக்கணக்கான அருந்ததியர்கள் மருத்துவர்களாக ஆகியுள்ளனர்.
போலி சமூக நீதி பேசும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சாதி வெறியர்கள் வெறியாட்டம், தமிழ்நாடு முழுவதும் கொல்லப்பட்ட அருந்ததியர் சமுதாய இளைஞர்கள் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட, கலவரம் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் மற்றும் பட்டியலின மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், கலவரங்கள் ஆகியவைகள் குறித்து தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் உண்மையான சமூக நீதி உருவாகும் என தெரிவித்துள்ளார்.