தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கொசு வலை, நாய் மற்றும் மாட்டு பொம்மைகளுடன் வந்ததால் கடும் மோதல் ஏற்பட்டது. அவைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த பொருட்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அ.தி.மு.க.வினர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Continues below advertisement

தாம்பரம் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் 

தாம்பரம் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின்போது, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கவுன்சிலர்கள், தங்கள் வார்டுகளில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டிக்கும் வகையில், கொசுவலை, நாய் மற்றும் மாட்டுப் பொம்மைகள் ஆகியவற்றை அரங்கிற்குள் கொண்டுவந்தனர்.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தரப்பில், அண்மையில் பெய்த பருவமழையின் காரணமாக மாநகராட்சிப் பகுதிகளில் கொசு உற்பத்தி அபரிமிதமாக அதிகரித்துள்ளதாகவும், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், பல வார்டுகளில் கழிவுநீரை முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றும், தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் பெருகி வருவதாகவும் கூறி, இவற்றைக் கண்டிக்கும் வகையில் தாங்கள் இந்த மாதிரியான பொருட்களைக் கொண்டுவந்ததாகத் தெரிவித்தனர்.

Continues below advertisement

மரபுக்கு எதிரானது என புகார் 

அவை நடவடிக்கையின்போது, அ.தி.மு.க.வினர் கொண்டுவந்த இந்த எதிர்ப்புக் குறியீடுகளுக்கு ஆளுங்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி கூட்டத்தில் இதுபோன்ற பொருட்களைக் காட்சிப்படுத்துவது மரபுக்கு எதிரானது என்றும், கூட்டத்தை நடத்தவிடாமல் குழப்பம் விளைவிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், மேயரின் உத்தரவின்பேரில், ஒழுங்கு நடவடிக்கையாக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

எதிர்ப்பை பதிவு செய்த அதிமுக கவுன்சிலர்கள்

கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பொதுமக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கக்கூட ஆளும் கட்சியினர் அனுமதி மறுக்கின்றனர். கொசுத் தொல்லை, கழிவுநீர் தேக்கம், கால்நடைகள் அச்சுறுத்தல் ஆகியவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர். 

மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பிரச்னைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்," என்று முழக்கமிட்டு அதிமுக கவுன்சிலர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்தப் போராட்டம் காரணமாக தாம்பரம் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.‌ அதிமுக கவுன்சிலர்களின் போராட்டத்தால் தாம்பரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்பட்டது.