வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழ்நாடு அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து, அதிமுக தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை வெளிப்படையாக நடத்தக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கு, உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு மேராக்களை பொருத்தவும், வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு அரசு உறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உத்தரவாதத்தை ஏற்று அதிமுக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது. மேலும், உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.




முன்னதாக, “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.  28 மாவட்டங்களில் நிரப்பப்படாத 789 இடங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதற்கட்ட வாக்குப்பதிவு அக்டோபார் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்.  9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி, 22ஆம் தேதி முடிவடையும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.செப்டம்பர் 25ஆம் தேதி  வேட்புமனுவை திரும்பப்பெறலாம். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள். பணியாளர் பற்றாக்குறை, நிர்வாக காரணங்களால் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் 40,000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கூறியிருந்தார்.


இதனைத்தொடர்ந்து, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இறுதியாக 23,998 பதவியிடங்களுக்கு 79,433 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 14, 571 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.