ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 27ம் தேதியன்று காலை 10 மணிக்கு தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன், கழகச் செய்தி தொடர்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும், அதிமுக தலைமை கழகம் சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அறிவித்த ஆலோசனைக் கூட்டம்:
முன்னதாக, அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
போட்டி பொதுக்குழு நடத்த ஓபிஎஸ் திட்டம்?
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், மாவட்ட வாரியாக தனது தரப்பிலான கட்சி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்ட ஓபிஎஸ், கட்சி அடிப்படையிலான 88 மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை நியமித்துள்ளார். அவர்கள் உடன் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக்கூட்டத்தில், தனது தரப்பிலும் போட்டி பொதுக்குழுவை நடத்தி, அதன் மூலம், கட்சிக்கு ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கட்சி செயல்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி, சட்ட ரீதியாக பழனிசாமியை எதிர்கொள்ள பன்னீர்செல்வம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனம், போட்டி பொதுக்குழு நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை தலைமை விவகாரம்:
அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் வெடித்ததை தொடர்ந்ததை அடுத்து, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற அக்கட்சி பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம், கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த பொதுக்குழு செல்லாது என உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.