ADMK Issue: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் இன்றைய தீர்ப்பு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரில் யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இரட்டை இலை சின்னம் யாருக்கு?


முன்னாள் முதலமைச்சர்  மற்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவுடன், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக கட்சி மற்றும் சின்னம் ஆகியவை எடப்பாடி தரப்பிற்கு சென்றது. அதேநேரம், இ.பி.எஸ். தரப்புக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார்களும் குவிந்தன. இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.


இரட்டை இலை சின்னம் முடங்குகிறதா?


இந்த வழக்கை சச்சின் தத்தா அமர்வு விசாரித்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளது. தேர்தல் ஆணையமும் தனது தரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. அதிமுக தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் நகல்களும் சமர்பிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ். அல்லது எடப்பாடி பழனிசாமி என யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதேநேரம், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தெளிவான ஒரு சூழல் இல்லாவிட்டால், அதிமுக சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவது அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஓ.பி.எஸ். நம்பிக்கை:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என, ஓபிஎஸ் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பேசி வருகிறார். நீதிமன்ற தீர்ப்பும் தங்களுக்கு சாதகமாகவே அமையும் என நம்பிக்கை தெரிவித்து வருகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தனியே கூட்டணி அமைத்து வரும் பாஜக உடன் ஓபிஎஸ் நெருக்கம் காட்டி வருகிறார். ஏற்கனவே கூட்டணி உறுதியானதை தொடர்ந்து தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தனது மகனும், தேனி எம்.பியுமான ரவீந்திரநாத்தை இந்த முறை, ராமநாதபுரத்தில் களமிறக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


அதிமுக நிலை என்ன?


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் திணறி வருகிறது. தேமுதிக உடன் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்க, பா.ம.க.வானது பா.ஜ.க. பக்கம் செல்வதாக தெரிகிறது. இந்த சூழலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால், அது அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக அமையும். இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை முடக்கி விடுவோம் என்று அதிமுகவை மிரட்டி,  கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மீது அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.