ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

ADMK ON Dmk: PM SHRI திட்டத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசின் கடித்தத்தை வெளியிட்டு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுக கேள்வி:
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேலூரில் நேற்று தெளிவாக பேசிவிட்டார். ஆனால், தேசிய கல்வி கொள்கையை ஏற்று
PM SHRI திட்டத்தை செயல்படுத்த MoU போட தயார் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடிதம் எழுதியது ஏன்? இந்தி திணிப்பை திமுக எதிர்க்கிற இலட்சணம் இதுதானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் கடிதத்தில் இருப்பது என்ன?
தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15ம் தேதி மத்திய அரசு எழுதியுள்ள அந்த கடிதத்தில், “பள்ளிக் கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பல முயற்சிகளை செயல்படுத்தி எங்களது மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தரமான கல்வியை வழங்குவதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
23.02.2024 தேதியிட்ட உங்களது கடிதத்தைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், மாநில அரசால் கையெழுத்திடப்படும். 2023-24ஆம் நிதியாண்டிற்கான 3வது மற்றும் 4வது தவணையை தயவு செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தமிழக அரசின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விளக்கம் என்ன?
முன்னதாக இந்த கடிதம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து இருந்த பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், “PM SHRI திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக தெரிவித்து இருந்தோம். ஆனால், குழுவின் பரிந்துரைகள் இந்த திட்டத்தின் மூலம், மும்மொழிக்கொள்கை கொண்டுவரப்படுவதை விளக்கியதை தொடர்ந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. ஒப்பந்தத்தில் இணைவதும், இணையாததும் தமிழகத்தின் விருப்பமே” என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.