மயிலாடுதுறையில் அவசரகதியில் கட்டிமுடிக்காத சுகாதார நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது பேசுப்பொருள் ஆன நிலையில் அரைகுறை ஆட்சிக்கு, இந்த நாடக திறப்பு விழாவே சாட்சி! என அதிமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
தமிழ்நாடு இன்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று பல்வேறு கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ராஜன் தோட்டம் அருகே 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த் கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்திருந்தார்.
நிறைவு பெறாத பணிகள்:
இந்நிலையில் இந்த கட்டிடத்தில் அடிப்படை கட்டுமான பணிகளே முழுமை அடையாத நிலையில் டைல்ஸ் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் முழுவதும் சுகாதார நிலையத்தில் உள்ளே பரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக அதற்கான திறப்பு விழா ஏற்பாட்டினை செய்து இன்று திறப்பு விழாவும் நடைப்பெற்றது.
கிளம்பிய விமர்சனம்:
இப்படி அரைகுறையாக முடிக்கபட்ட கட்டிடத்தில் நுழைந்து தங்களுக்கு எதாவது காயம் ஏற்ப்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும் இந்த படங்களை எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதிமுக விளாசல்:
இந்த நிலையில் இது எதிர்கட்சியான அதிமுக கடுமையாக விமர்சனத்தை எடுத்து வைத்துள்ளது. இது குறித்து வெளியான பதிவில் மயிலாடுதுறையில் பணிகள் நிறைவுபெறாத நகர்ப்புற சுகாதார நிலையத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். அரைகுறை ஆட்சிக்கு, இந்த நாடக திறப்பு விழாவே சாட்சி! விளம்பர மோகத்தில் பணி முடிந்து விட்டதா என்று கூட பாராமல் , பாதுகாப்பு முன்னெடுப்புகள் அதிகம் தேவைப்படுகிற சுகாதார நிலையத்தையே திறந்து வைத்து இருக்கிறீர்களே…. இதற்கு எப்போது "Sorry" கேட்கப் போகிறீர்கள் ?
மீறப்பட்டதா புரோட்டோகால்:
பொதுப்பணி துறை கட்டிட வேலை முடித்த பிறகு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒப்படைத்து, அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே முதல்வர் திறப்பு விழா நடத்துவது தமிழகத்தில் வழக்கம். ஆனால், இந்த சுகாதார நிலையம் முழுமையாக முடிக்காமலே முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.