CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
தவெக-வில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விரைவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு முக்கிய பதவியை விஜய் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை கால் நூற்றாண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமைக்குச் சொந்தமான அதிமுக-விற்கு தற்போது போதாத காலம் என்றே கூற வேண்டும். அந்த கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்து தற்போது அடங்கியுள்ளது. ஆனாலும், சிவி சண்முகம் மட்டும் தற்போது வரை எடப்பாடி பழனிசாமி பக்கம் போக மறுத்து வருகிறார்.
தவெக-வில் இணையும் சிவி சண்முகம்?
தமிழக வெற்றிக் கழக அரசை ஆதரித்தால் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற அவரது கணக்கு தவிடுபொடியாகிய நிலையில், அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கமணி மூலமாக சிவி சண்முகத்தை சமரசம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு முயற்சித்த நிலையில் இதுவரை அது கைகூடவில்லை. அதிமுக-வில் இருந்து இதுவரை 4 எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்துள்ள நிலையில், சிவி சண்முகமும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது.
என்ன பதவி?
இதுதொடர்பான கேள்விக்கு சிவி சண்முகம் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் சிவி சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்வார். ராஜினாமா செய்யும் சிவி சண்முகத்திற்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜுன் 1ம் தேதி அறிவிப்பு:
சிவி சண்முகம் இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில், சென்னையில் வரும் ஜுன் 1ம் தேதி தனது முடிவை அறிவிக்க உள்ளார். சிவி சண்முகம் மட்டுமின்றி முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கரும் இதுவரை எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் உள்ளார். நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜயபாஸ்கர் மக்களின் முடிவுதான் தனது முடிவு என்று கூறினார்.
அதிமுக-வில் மிகப்பெரிய அளவில் அதிகாரத்துடன் காணப்பட்ட இவர்கள் இருவரும் தவெக-வில் இணைந்தால் அது தவெக-விற்கு பலமாக காணப்படும். அதேசமயம் குதிரை பேரம் நடத்தி அதிமுக-வை உடைக்கிறார்கள் என்ற விமர்சனம் மேலும் வலுவாக தவெக மீது ஏற்படும். அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சருமான செங்கோட்டையன் மூலமாக இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
காத்திருக்கும் இடைத்தேர்தல்:
சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் இருவரும் தவெக-வில் இணைந்தால் தமிழ்நாட்டில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்படும். இந்த 6 தொகுதிகளையும் கைப்பற்றி தனது பெரும்பான்மையை மேலும் வலுப்படுத்த தவெக முயற்சிக்கும். இந்த தேர்தலில் விஜய் போட்டியிட யாருக்கு வாய்ப்பு வழங்குவார்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Before You Go
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
ட்ரெண்டிங் செய்திகள்





















