மக்களைத் தேடி வரும் எடப்பாடியார்.. தமிழ்நாடு முழுக்க ரோடு ஷோ.. திமுகவுக்கு எதிரா புது ஸ்கெட்ச்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலகட்டமே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த முறை தேர்தலுக்கான போட்டியில் களத்தில் இறங்கியிருப்பதால் தமிழக அரசியல் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வியூகம்:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகளை கொண்ட அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தல் முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றபிறகு எந்த தேர்தலிலும் பெரிய வெற்றியைப் பெறாத அதிமுக-விற்கு வரும் சட்டமன்ற தேர்தல் மிக மிக முக்கியமானதாகும்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக வியூகம் வகுத்து வருகிறார். அதற்காக அவர் கட்சியின் மூத்த தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை அடிக்கடி சந்திப்பு நடத்தி வருகிறார். இந்த சூழலில், இன்னும் 10 மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் ரோடு ஷோ:
அதாவது, சாதாரண சுற்றுப்பயணமாக இல்லாமல் வட இந்தியாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் செல்வது போல ரோடு ஷோ நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார்.
இந்த ரோடு ஷோ மூலம் மக்களை நேரில் சந்தித்து தனது செல்வாக்கை அதிகரிப்பதுடன், மக்கள் மத்தியில் திமுக அரசிற்கு எதிரான பரப்புரையையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த ரோடு ஷோவிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கூட்டணி கட்சி சிக்கல்கள்:
மேலும், ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த பிரம்மாண்ட கூட்டணியை உருவாக்கவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதனால், பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை தங்கள் வசம் வர விரும்பும் அனைத்து கட்சிகளையும் அதிமுக-வுடன் கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளார்.
இதனால், கூட்டணி குறித்தும், கூட்டணி கட்சிகளின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒருமித்த எண்ணத்தில் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பாமக உள்ளது. பா.ம.க.வில் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே பெரும் மோதலே நடந்து வருகிறது. இதனால், பாமக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது? என்பதே பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
மேலும், பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதும் கட்சியில் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? இதை கையாண்டு எப்படி தேர்தலை வெற்றிகரமாக மாற்றுவார்? என்பதே அவர் முன் உள்ள மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.





















