ஒவ்வொரு முறையும் அமித்ஷா மற்றும் மோடி தமிழகம் வந்தால் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க என்பது தேசிய கட்சி ஒவ்வொரு முறையும் அமித்ஷாவும் பிரதமர் மோடியும் வரும் பொழுது சந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதிமுக - பாஜக என்பது இரு வேறு கட்சி” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைக்கப்படும். தினகரன் அறிவிப்பு கொடுத்தாலும் அதிமுகவில் ஒரு சதவீதம் கூட கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.