ADMK: இந்திய தேர்தல் ஆணையம்   முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்ததுள்ளது. 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த ஆவணங்களையும் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக முழுமையாக அங்கீகரித்துள்ளது என்பதால், எடப்பாடி தரப்பினர் மகிச்சி அடைந்துள்ளனர். 


அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி மோதல் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியவாறே இருந்தது. முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெ.வுக்குப் பின்னர், முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி ஏற்றார். அதன் பின்னர் பொதுசெயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட கையோடு, அவர் முதலமைச்சர் பதவிக்கு குறி வைக்க, ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து தர்ம யுத்தத்தினை தொடங்கினார். இதனால் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் முகாமிடவைத்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால், கைதுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக நிர்ணயம் செய்தார் சசிகலா. 


அதன் பின்னர், ஓபிஎஸ் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்கொண்ட எடப்பாடி அதில் வென்று முதலமைச்சர் பதவியை தக்கவைத்தார். இதற்கிடையில், டிடிவி தினகரனை ஓரம் கட்டும் வேலையை இன்றைய அதிமுல பெரும் தலைகள் செய்தது. அதன் பின்னர், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் எடப்பாடி பக்கம் சாய, இறுதியில் ஓபிஎஸ் துணை முதலமைச்சர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளுடன் எடப்பாடிக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.  


ஆட்சி நடக்கும் போது இருவருக்கும் இடையில் அவ்வப்போது முட்டிமோதிக்கொள்ள அதனை  தங்கமணி, செங்கோட்டையன்,  ஜெயக்குமார், உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சமரசம் செய்து வைத்து வந்தனர். 2021 தேர்தலில் தென் தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், ஓபிஎஸ் பேச்சு கட்சிக்குள் எடுபடாமல் போனது. எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் அதிமுகவின் மற்றொரு அலுவலகமாக எடப்பாடியில் உள்ள தனது வீட்டை மாற்றும் அளவிற்கு அவருக்கான செல்வாக்கு தென் தமிழ்நாட்டு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மத்தியில் பெருகியது. 


இதனால், வனாகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுடன், கட்சி விதியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தனர். அதேமேடையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தில் நுழைந்து ஆவணங்களை கைப்பற்றினார். இது அரசியல் களத்தில் மட்டுமல்லாது பொது வெளியில் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் நிலையை உருவாக்கியது. 


இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், டெல்லி உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது. ஆனால் அங்கு அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு வழக்கு ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் என தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.