தமிழ்நாட்டின் அரசியல் களம் தேர்தலுக்கு பின்பும் அனல் பறந்து வருகிறது. அதிமுக-வில் உட்கட்சி மோதல் வெடித்து பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால், முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான சிவி சண்முகம் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார்.

Continues below advertisement

சரண் அடைந்த எம்எல்ஏ-க்கள்:

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்று சிவி சண்முகம் காய்நகர்த்திய நிலையில், தவெக அவர்களின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து அதிமுக-வில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட முடியாது என்பதை உணர்ந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி வசம் தஞ்சம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சபாநாயகரைச் சந்தித்து தங்களது ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே என்று கடிதமும் அளித்துவிட்டனர். ஆனால், சிவி சண்முகம் இதுவரை எடப்பாடி பழனிசாமி பக்கம் இணையாமல் உள்ளார். ஏனென்றால், அனைவரையும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி சிவி சண்முகத்தின் மீது மட்டும் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

இபிஎஸ் பக்கம் போகாத சிவி சண்முகம்:

அதிமுக - திமுக கூட்டணியில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயற்சித்தது, எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியை பறிப்பதற்கு பொதுக்குழுவை கூட்ட முயற்சித்தது, எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக விமர்சித்தது ஆகியவற்றால் சிவி சண்முகத்தை மீண்டும் இணைத்துக்கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் விரும்பவில்லை. அவ்வாறு இணைத்துக்கொண்டாலும் முன்பு போல முக்கிய பொறுப்பு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேசமயம், எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைந்தாலும் கட்சியில் இழந்த மாவட்டச் செயலாளர் பதவி, கட்சியின் முக்கிய பொறுப்புகளை திரும்ப பெற இயலாது, விழுப்புரத்தில் அதிமுக-வில் மீண்டும் அதிகாரம் பெற்ற நபராக உருவெடுக்க முடியாது என்பதாலும் சிவி சண்முகம் தற்போது எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும், அவரது அணியில் இணையவும் தயக்கம் காட்டி வருகிறார்.

தவெக-வில் இணைகிறாரா?

ஏற்கனவே 4 எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், சிவி சண்முகம் தங்கள் பக்கம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக அவரை தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மூலம் சமரசப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

ஆனாலும், சமரசம் அடையாத சிவி சண்முகம் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளார். தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் தன்னை இணைத்துக் கொள்ளலாமா? என்றும் சிவி சண்முகம் ஆலோசித்து வருகிறார். இன்று அல்லது நாளை சிவி சண்முகம் மிகவும் முக்கியமான முடிவை எடுப்பார் என்று கருதப்படுகிறது.