EPS - ANNAMALAI: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் முற்றி வந்து கொண்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு, ஈரோடு இடைத்தேர்தல் குறித்து, இபிஎஸ் தொலைபேசி வாயிலாக பேசியதாக அண்ணாமலை போட்டுடைத்தது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது.
ஈரோடு சீக்ரெட் - உடைத்த அண்ணாமலை:
சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை பேசியது, ஈரோடு என்னுடைய சொந்த ஊரு, சொந்த கோட்டை நான் தான் நிக்கனும் அப்டின்னு என்கிட்ட சொன்னாரு. ஆமா, அந்த சீக்ரெட் என்னென்னு நான் இப்ப சொல்றேன். இடைத் தேர்தல் அப்ப எனக்கு போன் செஞ்சு ஈரோடு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் நிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்டின்னு என்கிட்ட கேட்டாரு எடப்பாடி பழனிசாமி.
நான் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன். என்னுடைய வேட்பாளர் ஜெயிக்கனும்னா அதிமுக மட்டும் நிக்கனும் அதுக்கு வழி செஞ்சு கொடுங்க அப்படின்னு என்கிட்ட போன் மூலம் கேட்டவருதான் எடப்பாடி பழனிசாமி.
இதுதான் அந்த சீக்ரெட் ஓபிஎஸ்-க்கு என்ன மரியாதையை ஈபிஎஸ் கொடுத்தார் ? – அண்ணாமலை ஈபிஎஸ் சொன்னத நான் ஓபிஎஸ் அண்ணன் கிட்ட சொன்னேன். கண்ணியமாக, கம்பீரமாக அதிமுக தொண்டர்கள் அத்தனை பேரும் இரட்டை இலையில் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக ஒதுங்கி நின்றார். ஆனால், அவருக்கு என்ன மரியாதையை ஈபிஎஸ் கொடுத்தார் ? என அண்ணாமலை பேசியது சர்ச்சையை கிளப்பியது.
அண்ணாமலை மீது இபிஎஸ் தாக்கு:
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, துரோகத்தின் மொத்த உருவம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எனவும், பச்சோந்தி போல, அவ்வப்போது அண்ணாமலை நிறம் மாறுவார்.அண்ணாமலை போன்று, நான் நியமன தலைவர் இல்லை, அதிமுக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். தான் எப்படி என்று, கண்ணாடியை பார்த்து, அண்ணாமலை முதலில் தெரிந்து கொள்ளட்டும். அதிமுக முன்னோடித் தலைவர்கள் பற்றி, அண்ணாமலை அவதூறாக பேசினால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் . முதலில், அரசியல் தலைவர் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ள வேண்டும்.
”ஓபிஎஸ்-க்கு விசுவாசமே கிடையாது”
ஓ.பன்னீர்செல்வத்திற்கு விசுவாசம் என்பதே கிடையாது, அவர் ஒரு சுயநலவாதி எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலாவது விசுவாசமாக இருப்பார் என பார்த்தால் ராமநாதபுரத்தில் அதிமுகவுக்கு எதிராக போட்டியிட்டார். 97 சதவிகிதம் பேர், எங்கள் பக்கம் இருந்தாலும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது
”கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன”
மேலும் பேசுகையில், தமிழ்நாட்டில் அரசியல் படுகொலைகள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்தாலே, ஜனநாயக படுகொலைகள்தான் நடைபெறும்.
விக்கிரவாண்டியில் வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை கொடுத்து அடைத்து வைத்துள்ளனர். ஜனநாயக நாட்டில் யாரையும் வாக்களிக்க வேண்டாம் என கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவராத என அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவில் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது என இபிஎஸ் பேசினார்.