Phone Tapping: வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுலேயே தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், திமுக அரசு மீது அதிமுக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. 


பரபரப்பை கிளப்பிய ஒட்டு கேட்பு விவகாரம்:


தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழக உளவுத்துறை ஐஜி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.


அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.


தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை புகார் அளித்துள்ளார். தமிழக உளவுத்துறை ஐஜி  செந்தில்வேலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க இன்பத்துரை தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்துள்ளார். 


அதிமுக புகாரின் பின்னணி என்ன?


இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அளித்த புகார் பின்வருமாறு, "சில நபர்களை குறிவைக்க இந்தியாவில் பெகாசஸ் போன்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 2024 தேர்தலின்போது, எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசிகளைக் கண்காணிக்க / ஒட்டு கேட்க மாநில உளவுத்துறை இந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறது என்று காவல் துறையின் உயர் மட்ட வட்டாரங்கள் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில உளவுத்துறை இந்த மென்பொருளை வாங்கியுள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 40 கோடிக்கு மேல். இதை கணக்கு காட்டாமல் வாங்கியுள்ளனர். எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள், அவர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள், டிரைவர்கள் ஆகியோரின் மொபைல் போன்களை மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது.


தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கட்டுப்பாட்டில் மாநில உளவுத்துறை நேரடியாக செயல்படுகிறது. எங்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் தொலைபேசிகளை இடைமறித்து / ஹேக் செய்து,  எங்களின் தேர்தல் உத்திகள் பற்றிய தகவல்களை ஸ்டாலினிடம் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் தினமும் நேரடியாக வழங்குகிறார்.


மாநில உளவுத்துறையின் நியாயமற்ற நடைமுறை ஆளும் கட்சிக்கு பயனமாக அமைகிறது. சுதந்திரமான, நியாயமான தேர்தலின் நோக்கத்தை வீழ்த்துகிறது. உளவுத்துறை ஐஜி-யின் இத்தகைய செயல், இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) மற்றும் 21க்கு எதிரானது. தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் செயல் தனியுரிமை, பேச்சு உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கிறது. இரண்டுமே அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகள்" என குறிப்பிட்டுள்ளது.