சமீப காலமாக யூட்யூப் சேனல் பேட்டிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார் யூட்யூபர் திவாகர். அவரது பேச்சுக்கள் கடும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் நடந்த அணவக் கொலையையும் நியாயப்படுத்தி அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் மீது நடிகை ஷகீலா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
ஷகீலா அளித்த புகார் என்ன.?
சென்னை காவல் ஆணையரகத்தில், யூட்யூப் பிரபலம் திவாகர் மீது புகார் அளித்துள்ள ஷகீலா, தனது யூட்யூப் பேட்டியில், ஜி.பி. முத்துவின் சமூகத்தை குறிப்பிட்டு அவரைப் பற்றி பேச மறுத்ததோடு, நெல்லை ஆணவப் படுகொலையை தனது சமூகத்தை குறிப்பிட்டு, நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், திவாகரின் பேட்டிகள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக தனது புகாரில் கூறியுள்ள ஷகீலா, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திவாகரின் பேச்சு குற்றமாக கருதப்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அதனால், திவாகர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீப காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் திவாகர்
கஜினி படத்தில் வரும் நடிகர் சூர்யாவைப் போல், வாட்டர்மெலன் சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்து வெளியிட்டு, அதன் மூலம் இணையத்தில் பிரபலமானவர் திவாகர். அதற்குப் பிறகு வாட்டர் மெலன் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டத்தை கொடுத்துக் கொண்டார்.
இணையத்தில் தனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து, வாக்கு வந்ததை பேசி இவர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் நடித்த திவாகர், அதன் பின் தான் மிகப்பெரிய நடிகன் என்றும், மற்ற நடிகர்கள் தன்னிடம் தோற்றுப் போவார்கள் என்றும் ஒரு பேட்டியில் பேசினார்.
சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலங்களை பற்றி திவாகர் மோசமாக பேசியதற்கு கடும் எதிர்ப்பு எந்த நிலையில், அவர் அளித்த ஒரு பேட்டியின்போது, தொகுப்பாளர் அவரை கேள்விகளால் துளைத்த வீடியோவும் வெயிாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் தான், ஜி.பி. முத்துவின் சாதியை கூறி அவரைப் பற்றி பேச முடியாது என கூறியதும், நெல்லை ஆணவப் படுகொலையை நியாயப்படுத்தியதும், நெட்டிசன்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து தான், சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலும், சாதி ரீதியான வெறுப்புணர்வை தூண்டும் வகையில் திவாகர் பேசுவதாகக் கூறி, அதை எதிர்த்து குரல் கொடுப்பது, பொறுப்புள்ள ஒரு சமூகப் பிரபலமான தனது கடமை எனக் கூறி, நடிகை ஷகீலா காவல்துறையிடம் திவாகர் மீது புகார் அளித்துள்ளார்.